மார்கழி திங்கள் வைகறை நேரம்
மாலவன் திருவடி தேடி போவீர்
துயிலெழுந்து நன்றே நீராடி ஆடை
யுடுத்தி தோடனிந்து கவர் விழியிற்
கருந்தடவி மால் கூந்தல் பின்னி
தொடுத்த மலர்ச் சூடி குங்குமமப்பி
வாயிற்தொரும் வண்ண பூ கோலமிட்டு
என்னிச்சை மால் வண்ணன் செங்கண்ணன்
திரு கண்களால் தீதொழிய நோக்கவே
பறையை இசைப்போம் வாருங்கோள் பிள்ளாய்
காய்ச்சின பாலும் கற்கண்டும் தேனும்
அவல் பொறி அப்பம் இவை எல்லாம்
மால் வண்ணன் பாரா கண்ணன்
நோக்கும் எதிர் திக்கெல்லாம் அருள்
போக்கும் கடுந்துயர் எல்லாம் நீரின்றி
போகாத கடல் கதுவாய்ப்பட முகர்ந்த
மேகம் குடவாய்ப்பட பொழிவதை போல
நாடெங்கும் பொழிந்திட அவன் பெருவாய்
நிறைய ஊட்டி மகிழ வருவீரோ
பிறப்பு உண்டு பூமியிலே பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு இருப்பினும் அதில்
திருவடி தொழ பிறப்பெதினில் பேதை
பெதும்பை மங்கை மடந்தை அறிவை
தெரிவை பேரிளம் என ஏழு நிலையும்
பொருந்தா பிறவா வேண்டும் முல்லை
வனத் தலைவன் வஞ்சியர் வாயவி
நித்தம் உண்டு வாழ்வதெனில் சித்தம்
மட்டும் அவனியிலே கேள்வன் பருகா
வாயதழும் தடமுலையும் இன்றி பிறக்கிலேன்
தூயனை நேயனை மாயனை ஆயனை
தூணை பிளந்தானை தெள்ளி களைந்தானை
கன்னி அல்லாற் பிறர்பால் வணங்குதற்
கியலாது மண்ணில் திருச்செய்த திரு
அவதாரங்கள் எதிலுமே கன்னியர் மனம்
கவர்ந்தானே மையல் தந்தானே திருவடியும்
தந்தானே அவர் வேள்வி ஏதும்
செய்யாமலே இப்பயன் ஆண்பால் சேராது
ஒழித்தானே ஏனோ திருக்கொங்கை மேல்
திருத்துயில் திருவளவன் நீங்காத இயல்போ
வையம் உய்ய அருளும் மாலே
தையல் நோக வாழ்வதேன் மாலே
களிற்றின் அகவல் நின்னை யாது
உளுப்பியதோ பாம்பனை உதறி இபம்
காத்தாய் எளியவர் வறுமை ஓட்ட
உந்தனுக்கு நேர் பொருள் தந்தாய்
நின் தாளால் மிதித்து உயிர் தந்தாய்
புகலிடம் ஒழிந்த கோன் பாதம்
பற்ற பாதாளம் அளித்தாய் என்
அகவல் கேட்டும் வாராது வதைத்தாய்
தெள்ளியார்க் கெல்லாம் ஒளியில்லை உன்
புகழ்மேனி வடிவழகு அகத்தினில் தீட்டி
ஒண்ணின்றி போனதனால் வேத வாய்
மறை யார்க்கெல்லாம் பறையில்லை உன்
நாமம் ஆயிரம் நவின்றும் உன் சீர்வடிவு
அவர் அறிவது அரியது எனில்
உன் அங்கங்கள் யாதுள் யாதழகு
என முகைக்கு நேர்கொங்கை கொண்டிள
ஆய் மங்கயற்கு தீட்டாது நவிலாது
அணைத்து இணைத்து நவின்றாய் நாரணா
குறை யொன்றுமில்லாத கோவிந்தா உமக்கு
எம்மோடு உவக்க ஒழியாத பொழுதோ
வெண் அலைபாற்கடல் மேலதில் பாம்பனை
விரித்து பொன்வண்ண பவளவாய் பொற்றாமரை
திருமேனி உந்தனுக்கு மறந்தும் வறியவர்க்கு
மறவா ஈயும் அகத்தாள் உந்தன்
மார்போடு தலை சாய்த்து பண்ணிசைத்தால்
மண்ணகத்தே ஒருபோது உண்டு நோற்கின்றேன்
சிறுச்சிறிதே எம்மை நோக்குதியேல் எந்தன்
இலகுவயிற் கொண்ட தேகம் வளராதோ
விண்ணவரும் அண்ணா நிற்கும் பொருளே
நின்னை சேரும் தடமிதென யாரிங்கு
கண்டார் கண்டறிந்த தடங்கள் அவற்றுள்
நெஞ்சிற்கு கொண்டு சேர்த்தாள் கோதை
விருப்புடனே வாயினால் பாடி மனத்தினால்
சிந்தித்த திருமொழி அதனை நாள்தொறும்
நவின்று வாழ்ந்தால் அலைகடல் நோக்கி
பாயும் கடுவலும் நின்று பொழியும்
அவ்வண்ணம் பறைதர்க் கடிய மறை
ஒதுக்கி மையல் போற்றினாள் செல்வி
கூகை அகலும் நேரத்தில் நெஞ்சம்தான்
உந்தன் துணை தேடுதடா மணவாளா
காற்றில் உன் குழலோசை துணையென
வருகுதடா பிறையும் காணா தேய்ந்த
நடு நிசிதன்னில் பைந்தோல் போர்த்தும்
வையம் மேல் வானம் இருள் திரண்ட
கோலம் கண்டால் பச்சிளம் என்னுள்ளே
பிணி திரள கண்டேன் ஒளிப்பெருக்கி
சந்திரன் வருவதன்ன மனவொளியென நீ
வருக பனித்துளியென பிணியும் ஒழிக
நோற்று சுவர்க்கமே புகுந்தாலும் ஈட்ட
இயலாத பேரரறிவு ஒன்றை காட்டி
தந்த கரியபிரான் உரைத்த நன்மொழி
சுற்றம் சூழ நாள்தோறும் நவின்று
உட்பொருள் உள்ளூர தான் உணர்ந்து
வாய்மொழி குறில் நெடில் முறையென
மொழிந்து நூல் காட்டும் வழியதனில்
வாழ்வாங்கு வாழாதோர் தேவாதி தேவன்
உறையும் அவ்விடத்தில் தாள் படிந்திலர்
சான்றான பலன் ஈட்டாதோர் அன்றோ
புள்ளினம் சிலம்பின காண் எருமை
சிறுவீடு மேய்ந்தன காண் வெள்ளி
முளைத்து வியாழம் உறங்கியும் காண்
இலவம் அடைத்த மெத்தை நல்லுறக்கம்
கொடுத்ததுவோ விழித்திடும் மனங்கொள்ளாய் பிள்ளாய்
அடியார்க்கு இனியானை படியார்க்கு வேலோனை
திருவயலாலி நகர் வாழும் அழகப்பனை
குளிர்ந்த மனம் இடுக்கண் துடைக்கும்
தாயை தன் வலதே கொண்ட சிங்கனை
நம் நெஞ்சத்தே வாழ பணிந்திடாய்
கார் அடர்ந்த வானிலை எங்கும்
ஊர் சூழ்ந்த மாநில வெள்ளம்
காப்பரணாய் கண்ணபிரா கரம்தாழ்த்து கொஞ்சம்
ஊழ்வினை உருத்து வந்து வாட்ட
வினைப்பயன் நற்பயனாக அமைய காப்பாய்
செஞ்ஞாயிறு உதித்திட்ட பின்னே நீ
வருவாயென சேவல் கூவும் முன்னே
நீராடும் வேளையில் எங்கள் ஆடை
பூங்குருந்தேரி ஒளித்த கண்ணா என்றும்
அதுபோலே விளையாட எங்களை காப்பாய்
பட்டி மேய்த்து ஆடும் வேளையில்
குழல் ஊதி வந்தால் கோவிந்தா
நாங்கள் தான் தொழில் செய்ய
இயலுமோ மனம் எல்லாம் கொள்ளை
கொண்ட பின்னே இவ்விடம் வந்ததும்
தான் அறிவோமோ மாலையில் எங்கு
செல்வதும்தான் அறிவோமோ எனில் எம்
மனைமார் அவர் பெற்றம் திரும்பாதது
ஏனென்றே விரைந்தால் உன்பாற் பழி
அது எம்மேல் பாவம் ஆகாதோ
மார்கழி வருவது வருடம் ஒருமுறை
திருப்பாவை அருளிய மொழியெல்லாம் கேக்க
மனம் திருவிழவு போற்றுவது ஏனோ
ஒருமுறை என்ற இன்பம் பன்னிருமுறை
காண ஏங்கும் எனக்கு திருவயலாலி
மன்னன் கொடுக்க ஒரு பொருளும்
உண்டு உன் பாதம் போற்றுவாள்
அவரே என் கைகள் பற்றி
தீஞ்சுவை இன்பம் செய்விப்பார் அறிவாய்
பொருளே மூலமே தருவாய் அப்பொருளே
காண்பதெல்லாம் கனவு அன்றே நாரணா
காய்ந்து கிடந்ததே எம்மவர் கான்
அங்கே செந்நெல் விளைத்தல் இன்று
இயலாது எனில் நாரணா அவ்வடிசல்
சோற்றில் நெய் மூட பெய்து
முழங்கை வழி வார குளிர்ந்திருக்க
கூடல் எங்ஙனம் நிகழும் உன்
சார்ங்கம் தான் சர மழையென
கணை தொடுக்கும் எனில் உன்னது
வண்ணம் தானே அம்முகில் பின்
ஏனோ கணையென மழை தொடுக்காதது