Sunday, September 17, 2017

நரசிம்ம பெருமுழக்கம்

பகல் அன்றி இரவும் அன்றி இடையே
பொழுதொன்று அகமன்றி புறமுமன்றி
இடையினிற் இடனொன்று நரனன்றி
கொல் விலங்கன்றி  எவர் உண்டு

எஃகு உருக்கி செய்பொருள் அல்ல
எமை கொல்வான் எதைக் கொள்வான்
செரு தொடுத்த அவுணன் என் திறனொழிய
செரு தொடுக்க பெருமாள் எவன் உள்ளான்

 அகம்  அல்ல இல் புறமும் அல்ல
எவ்விடம் நின்று என்னை வெல்வான்
அறியா பாலன் விளிக் கேட்டும்
விழிக் கொள்ளா நாரணன் என்றான்

அரி உள்ளான் விழிக் கொள்வான் புவி
அறிய அறம் ஓங்க அவன் வருவான்
தூணிலும் துமியினிலும் இருப்பான்
மதிகெட்டார் மருள் நீக்கும் நாரணன்

வருவானோ எம்முன் நகைக் கூட்டம்
செய்தான் என்னை வெல்வதோர் வழி
அறிந்திலர் நரனும் உம்பரும் பேழ் அரியும்
எவர் குறித்தும் கிலி அறியேனென்றான் 

எங்கும் உள்ளான் என்றும் உள்ளான்
ஊழின் திரை காட்ட முற்படா எனினும்
ஞாலம் போற்றும் அரியென மொழிதல்
யாரினும் வலியவன் அவனென உணர்வீர்

சாதலற்று வாழ பேறு பெற்றேன் யான்
எண் திசை மறவரும் அஞ்ச வென்றேன்
ஞாலம் போற்றும் எஞ்ஞான்றும் எம்மை
யான் என்றும் போற்றிலேன் அரியை

ஆசையறு அதன் பயன் சா ஐயமறும்
பணி செய் மேலோர்க்கு பணிந்து செய்
எப்பேறும் எஞ்ஞான்றும் அரியிடம் ஈந்திடு
இங்கனம் வாழ் மேலோர் உய்வரே

இன்றே வரச் சொல் இங்கு வரச் சொல்
துஞ்ச துணிவுக் கொள் அரியை எம்முன்
இருக் கைகள் தோமர படை வீசி
தூண் கோடிடித்து விளித்தான் தன் கூற்றை

பகல் முடிந்து இரவு எழவே இடைப்
பொழுது ஒரு நாழி அப்பொழுது
தூண் உடைத்து புலம் நடுங்க உறு
உறுவென அவன் உறுமி வந்தான்

செருக்கேறி பிதற்றும் அரக்கன் முன்
நர உடலும் அரிமா தலையும்  ஊன் 
கிழிக்கும் வல்லெயிறும் நற நறவென
வள்ளுகிருடன் சீறி கோளரியாய் நின்றான்

தன் படை யாவும் அற்றற்று வீழ
கோடும் நுதிலும் சிதையக் கண்டான்
இவனே மாயன் அறமெனும் கூற்று
தன்னைக் கொல்ல நிற்க கண்டான்

அறமறுத்த இரணியன் ஆகம் அறுக்க
மனைப் படியில் மடி மிசை கிடத்தினான்
வல்லுடல் வள்ளுகிரால் வகிர்ந்து குருதிப் பட
சிவந்த முகமென அருளும் சிங்களே்குன்றமே

நான்முகனும் பிறை பித்தனும் முப்பத்து
மூவரும் நா தழுக்க வெரு கொண்டினரே
ஆர் கோட்ட தினை சிதை பெருமால் கேழல்
வகிர்ந்த சிம்மமாய் அரி நின்ற சிங்கவேள்குன்றமே 

பத்தனை பேண ஆமருவி வந்தான்
தந்தையெனினும் அறம் தளிர தனையன்
நெறியுரை கேளா அவுணன் உடல் கீண்டான்
செஞ்சுமகள் துணை சேர தண்ணகம் கொண்டான்

தமிழ் மாநிலம் வடவெல்லை தண்முகில்
சூழ்வேங்கடம் அதன் வட குடக்கே
மருள் நீக்கி அருள பேழ்வாய் கோளரியாய்
தான் அமர்ந்த சிங்கவேள் குன்றமே