Monday, July 9, 2018

கூடல்

மலரோடு வண்டு கதைப் பேசுதே
மண்ணோடு மழையும் உறவாடுதே
என்னோடு நீயும் உறவாடவே
காத்திருக்கிறேன் கண்மணி

கரைத் தேடி அலையும் நடைப்போடுதே
நுரையாக பேசி விடைப் பெறுகுதே
உன்னோடு நானும் உரையாடவே
காத்திருக்கிறேன் கண்மணி

கனியோடு சுவையும் கலந்திருக்குதே
முள்ளோடு மலரும் இணைந்திருக்குதே
இரவோடு குளிரும் எனைத் தீண்டுதே
உனைத் தீண்ட ஏனடி இடைவெளி

மனதுள்ளே காதல் கரைத் தாண்டுதே
உனைக் காண கண்கள் அலைகின்றதே
விழியோடு கனவும் உறவாடுதே
தலைவனே, காண வருகிறேன்

மலர்கின்ற மாலைப் பொழுதானதே
இளங்காற்று தீண்ட உடல் வேகுதே
உனைக் கூடி களிக்க மனம் ஏங்குதே
தலைவனே, காண வருகிறேன்

Monday, March 5, 2018

asamyukta hastha viniyoga

சர்பசீர்ஷம்

சுழன்றுசாந்த மிழைத்தலும் அரவும் உழையும்
மங்களநீர்ச் சென்னியில் தெளித்தலும் ஊட்டமும்
இயவுட்கு நீரளித்தலும் தோள்தழுவும் மகிழ்ந அன்பும்
களிற்றின் தலையும் மற்போரிட கைவலி காட்டவும்
ஆகும் அரவுச்சென்னி பயன்களாம்.

பத்மகோஷ

கூவிளம் கொக்கு விளாம் முதலாக் கனிகளும்
முகையும் மலர்மழையும் அலர்க் கொத்தும்
தாமரை செம்பருத்தி முதலா மலர்களும்
கலமும் அதில் நல்லுணவும் ,முட்டையும்
கொங்கையும் வட்டப் பந்தும் புற்றும்
சுழலாட்டமும் மணிகளும் இவை ஆகும்
தாமரை மொட்டின் பயன்களாம்


Tuesday, February 27, 2018

AgavalPa songs - Solitude


எவ்வழி என்பா் சென்றதோ அறியோம்
யாதும் அறிவாய் காற்றே! அவா்தம்
புகலிடம் புகுவாய் பசலை பூத்த
திடமென் வேய்தோள் தேயுறத்
தீதாற்றும் என்னிலை சென்றுரை விரைந்தே!


கேளாய் தோழி! நெருநை தொழூஉ துவர்நிறத்து
கொலை ஏறுகோடுக் காணினும் அஞ்சான் பாய்ந்துதன்
கைஇருக் கொண்டு இமில் தழீஇய அப்பொதுவன் 
கங்குல் கனவில் நாணவந்தான் சுணங்கு அணி 
முலைஇமில் எனவோ தழீஇ எயிற்று
ஊறும் அமிழ்துண்டு களித்தானடி நல்லாய் மகனவன்

கேளாய் தோழி நெருநை நடந்ததுவோ 
பணிசெய் அம்மனையில் கணினி அகத்து 
நிரல்புக்கி நானோ நைந்ததனால் சற்றே 
தேநீர்பருகி அயர்வற சென்றேனா அவனும் 
வந்தான் கண்டேனா கங்குலுள் 
கனவில் என்னிதழ்நீர் குடித்தானடி என்செய்கேன்

Thursday, January 4, 2018

vazhakuraitha kathai வழக்குரைத்தக் காதை

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
      யாரையோய்க் கூறாய்
சீர்தொலை முகமொடு கையில் தனிச்
     சிலம்பேந்தி வந்தோய்
ஆர்வேல் காவலர் இடர்ந்தும் புறந்தள்ளி
      வந்தோய்க் கொற்றவை
உருக்கொள் பெண்ணே அமிளி யோடிங்கு
         புகுந்ததேன் கூறாய்

ஊழ்வினை உருத்த பொருளோடு புகழும் 
         இழந்துகெட துணையோடு
வாழ்தல் வேண்டீஇ நின்நகர் வந்தோம்
         படிறில்லாப் பெருமாட்டி நின்
கழற்சிலம்பு பகர்ந்து பொருள் கொள்
         வோமெனவந்த கணவனை
கள்வனென உன்நீதிக் கொன்றக் கோவலன்
         மனைவி கண்ணகி யானே

கள்வனைக் கூற்றுக் கிரையாக வகுத்தல்
       சான்றேர் அறமேஎ நீ
கலங்கியே எம்முன் வந்தோய் இருந்தும்
       வீழ்ந்தது மீளாது என்ப
கோவலன் தேவி இஃதறியாது இவ்விடத்தே 
      வழக்கெடுத்துத் தென்னவர்
கோமான் எம்முன் வந்தோய்ச் செல்வோய்
      அரசவை தான் விடுத்து

கேளாது முடிவுரைத்த கொடுங் கோலரசே
         கள்வன் நீயே ஆகுக
கேள்வனே கள்வன் என்னுடை யாரல்லர்
        அவையோரே கேன்மின்
இச்செயலும் முறையோ கன்றுக் கிரங்கி
        மகனைக் கொன்றவர்
சோழத் தேவர் செருக் குடைமையால்
        அறங்கொன்றவன் நீ ஆகுக

அல்லவே கண்ணகி படிறுதேரா முடிவு
         உரைத்தேன் அல்லவே
உண்டோச் சான்று நின்வழக்கு வலியுற
        அதையும் இவ்வேக் கூறாய்
அல்லவே மன்னவ என்கோவலர் கள்ளன்
        அல்லவே தேராமன்னா
உண்டிங்குச் சான்று துணைஇல் என்கழற்
        சிலம்பு உரைக்கும் கேன்மின்

குலையிழைப் பெண்னே நின் தனிச்சிலம்பு
         தருகவெனப் பெற்றான்
கூடியிருந்தோர் முன்னே அவள் சிலம்பு
          புடைப்ப உதிர்த்தது
மணிகள் காணோய் மன்னவ நின் தேவியின்
         சிலம்பு களிரண்டும்
புடைப்போய் ஒன்று உதிர்ப்பது மணிகள்
         அறக்கேட்டை அறிவோய்

கோப்பெருந் தேவியின் சிலம்பி லொன்று
         உரைத்தது உண்மை
கோவலர் பாற்குற்றம் அல்ல தானேஅறம்
         வழுவினன் என்றோ
கோமானே பதறிதரை யினிற்வீழ்ந் தீரோ
          வளைந்த உம்செங்
கோல்நேர் படவையம் இறந்தோய் இவ்வே
          தேவி யானும் இறப்பேன்

உழுவை வெருக்கொள உருக்கொள் வல்
          யவனரைப் பணித்த
செழியா சரியும் நின்குடை அந்நிழலில்
          வாழ்ந்த தமிழ் வளர்
கழகநகர் முழுதும் இரையெனத் தீகொள்ள
          யானும் என் இடமுலை
கிழித்தேன் துணையில்லாதினி உயிர் வளர்
         கடவேன் ஆவிப் பிரிவேன்