Tuesday, August 8, 2017

ஆடலரசர் பெருமுழக்கம்

ஆட பயில என்னை பணித்தான்
அஃது ஏற்று யானும் பணிந்தேன்
புறம் தள்ளாது  திறம் தோய
நான் பயில அருட் செய்த
தண் உள்ளம் அம்மை ஊர்மிளை
பெருந்தகை அவர் தாள் யான்
என்றும் பணிவேன்

பெருந்தகை அருள் செய்ய யானும்
ஆடற் கல்வி பயின்றறிய நூலறி
பெருவுள்ளம் கொள் வள்ளல் இரு
பெண்ணம்மை இரமை சாய் கிருபை
அவர் தாளினும் யான் என்றும்
பணிவேன்

புவியே நின் யாக்கை  நின் வாய்மொழி
அண்ட  பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்

உள்ளத்தில்  பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே

பித்தை தரித்து பிறை அணிந்து
மரையேந்தி வெள்ளி வரை மிசை
நிறைப்  பொருளே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

தோடுடைய செவியா சுடலைப் பொடி
உடலெல்லாம் பூசி முப்புரம் எரிவித்த
முக்கண் முதல்வா நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

வலமூன்றி  இடம் ஏறு தில்லை
வழுதிக்கிரங்கி வலம் ஏறு கூடல்
நகர்வாழ் இறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

பித்தை விரித்து உடைப்பெடுத்த
பெருநீர் கங்கை தரை இறங்க
அருள் பொருந்திறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

கள்ளவிழ் பூங்கணை தொடுத்த மாறன்
மெய்யழித்து தக தகவென நேயன்
உயிரோம்ப கூற்றை தாளோங்கி
உயிரழித்து நீ தாண்டவமாட கண்டனே

மாமுனிக் கிரங்கி உம்பர் பண்ணெடுப்ப
தகிட தகிட தகிடவென சீரமைய
முழவு முழங்க முழங்க வெள்ளியரங்கிற்
நீளரவு தாரணிந்து நீ தாண்டவமாட கண்டனே

வலக்கை உடுக்கை ஏந்த அரைபிறை இடக்கை
தீர்கை தீயெரிக்க கல்லாமை அவுணன்
மிசை அரைக்கால் வலமூன்றி இடதெழ
கீழ் வலக் கை காப்பு இடையரவு மறுமையற

பித்தை பூட்டும் பெருநீர் பெருவாழ்வருள
சென்னிச் சூடும் பிறை அறுபொழுதருள
உடுக்கை ஒலித்து புது வாழ்வு அருள
கீழ் இடக் கை துதிக்கை யாவும் உன்னுளிழுக்க

வலக் கழல் தீதறியாமை மிதித்தழிக்க
இடக் கழல் தீதில்லா உய்தி அளிக்க
திருவாச்சி இவ் வாழ்வு நில்லாதுழள
இஃது விளக்கி தில்லையிற் கூத்தாட கண்டேனே

மொழிக்கு செரு தொடுத்து கீரர்க்கு
நுதல் கண்ணால் தெறல் கொடுத்து
அருள் கண்ணால் புகழ் கொடுத்து
நின் கையால் பாகொடுத்து நீ தமிழ் பாட கண்டனே

அம்பரம் அறுத்து உயர்ந்தோனே தாள்
தரணி பிளந்து நீண்டோனே சித்தும்
சத்தியும் ஒன்றென நின்றோனே என்
தீதற கனல் தீயென நீ தாண்டவமாட கண்டனே

புலி தோலை இடையிற் உடுத்தி மிளிர்
கொன்றை அடர் பித்தையிற் சூடி விறு
விறுவென வேழம் மெய்க்கிழித்து கெடு
செருக்கழித்து கானிடையே தாண்டவமாட கண்டனே





No comments:

Post a Comment